2021 ஆம் ஆண்டிற்கான 69 ஆவது தேசிய தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கருவறை குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த கல்வி திரைப்படமாக இயக்குநர் பி.லெனினின் 'சிற்பிகளின் சிற்பங்கள்' தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி விவசாயி படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படமாக கடைசி விவசாயி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இசையமைப்பாளர் தேவா மற்றும் விருதை பெற்றுள்ள அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். உடன் கருவறை படத்தின் இயக்குநரும் இருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய தேவா, ''இருவரும் எப்பொழுதும் ஸ்டுடியோவில் இருப்பார்கள். படம் வொர்க் பண்ணிட்டு இருப்பாங்க. இதுக்கு முன்பு கட்டில் என்று ஒரு படம் எடுத்தாங்க. நிச்சயமாக அவார்டு வாங்கும். இந்த திரைப்படம் கருவறை. இதை அற்புதமாக ஸ்ரீகாந்த் தேவா விருது வாங்குகின்ற அளவுக்கு படம் செய்து பேக்ரவுண்ட் ஸ்கோர் செய்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் தேவா முதலில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தில் ஒரு அம்மா பாட்டு ஒன்று வரும் 'நீயே... நீயே...' என்ற பாடல். அதற்கு ஜெயலலிதா மாநில விருது கொடுத்தார்கள். ஸ்ரீகாந்த் தேவாவிற்கு இப்பொழுதும் அதே அம்மா, அதே கருவறை, அம்மாவை வைத்து தான் சப்ஜெக்ட். இந்த கருவறைக்கு நேஷனல் அவார்ட் கிடைத்துள்ளது என்றால் அது அம்பாளுடைய அனுக்கிரகம் என்று தான் சொல்வேன்.
அதேபோல நிறைய பேர் உழைச்சிருப்பார்கள். அவர்கள் எல்லாருக்கும் அவர்களுடைய உழைப்புக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஸ்ரீகாந்த் தேவாவின் கடின உழைப்புக்கு கிடைத்த விருது இது. உங்களுக்கு முன்னாடி ஸ்ரீகாந்த் தேவாவிற்கு ஒரு அட்வைஸ் பண்ணி விடுகிறேன். அவார்ட் எல்லாம் வாங்கி விட்டாய் ஓகே இதற்குப் பிறகு வரும் படங்கள் எல்லாம் இந்த படமும் நேஷனல் அவார்டு வாங்கி கொடுக்கும் என்ற தைரியத்தில், நம்பிக்கையில் நீ இசையமைக்கும் படங்களை எல்லாம் பண்ண வேண்டும். அற்புதமான வழி நமக்கு திறந்துள்ளது. இதை நான் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். நாங்க எல்லாம் திரைக்கு பின்னாடி இருப்பவர்கள் தான். கதாநாயகர்கள் அல்ல இருந்தாலும் எங்களிடம் பத்து பேர் ஆட்டோகிராப் கேட்பதை போன்றும், செல்ஃபி எடுக்கும் அளவிற்கும் வளர்த்து விட்டது ஊடகங்கள் தான். எல்லாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.