கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள குடும்பங்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் வழங்க தஞ்சை மண்டல கரோனா சிறப்பு அதிகாரி சண்முகம் வங்கிகளுக்கு உத்தரவிட்டிருப்பது பெண்கள் வட்டாரத்தில் மனமகிழ்வை உண்டாக்கியுள்ளது.
நாகை மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் 42 பேர் குணமடைந்தும் 3 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர். இந்த நிலையில் சென்னை மாநகரில் கரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறியதைத் தொடர்ந்து மாவட்டத்தில் மேற்கொள்ளகூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தஞ்சை மண்டல கரோனா சிறப்பு அதிகாரி தலைமையில், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர், நாகை எஸ்.பி செல்வ நாகரத்தினம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கரோனா சிறப்பு அதிகாரி சண்முகம், "சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து தங்கள் பகுதிக்கு வரும் நபர்கள் குறித்து, பொதுமக்கள் '1077' மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். சென்னை, பெங்களூர், மைசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து நாகைக்கு வந்தால் கரோனா பரிசோதனை கட்டாயம் செய்யவேண்டும். மாவட்டத்திற்கு உள்ளே வருபவர்களைத் தனிமைப்படுத்த நாகை, மயிலாடுதுறையில் தனித்தனி அறைகள் கொண்ட 3 மையங்கள் தயாராக உள்ளது.
மேலும், நாகை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள 10 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்குத் தலா 60 ஆயிரம் ரூபாய் வீதம் குறைந்த வட்டியில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுய உதவி குழுக்களுக்கான கடன் தொகையை 10 தினங்களுக்குள் வழங்க வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இந்த அறிவிப்பு பலதரப்பட்ட கிராமப்புற மக்களையும் வந்தடைய வேண்டும் என்பதே பலரது ஆர்வமாக இருக்கிறது.