திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள சின்னாளபட்டி தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பிறகு பேசிய அவர், “இந்த முகாமில் தகுதியுள்ள எந்த ஒரு கூலித்தொழிலாளி குடும்பத்தையும் பதிவு செய்யாமல் விடக்கூடாது. இப்பகுதியில் கைத்தறி நெசவு மற்றும் சுங்குடி பிரிண்டிங் பட்டறை, சாயப்பட்டறைகளில் நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்குத் திராவிட மாடல் ஆட்சி நாயகன், தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்க இருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கைத்தறி நெசவாளர்கள் நெசவு நெய்துவிட்டு மதியம் மற்றும் மாலை நேரங்களில்தான் அதிகம் வருவார்கள். பதிவேற்றம் செய்யும் அலுவலர்கள் பொறுமையுடன் அவர்களுக்குப் பதிவு செய்ய வேண்டும்” எனக் கூறினார். இதில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, கோட்டாட்சியர் கமலக்கண்ணன் மற்றும் பல அதிகாரிகளும், திமுகவினரும் கலந்துகொண்டனர்.