புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவேல் மகள் கஸ்தூரி(19). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், வேலைக்கு வந்த கஸ்தூரி கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து காவல் துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த கடந்த 31 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் ஆற்றில் கஸ்தூரி சடலமாக சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்தில்.. ஆலங்குடியில் குட்டியானை ஓட்டுனர் நகாராஜ் கைது செய்யப்பட்டார். சில தினங்களுக்குப் பிறகு நகராஜின் சித்தி போதும்மணி கைது செய்யப்பட்டார். ஆனால், இது தனிப்பட்ட நபர் செய்த கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்றும், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி நாகராஜ் நண்பர்களுடன் சேர்ந்து கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கஸ்தூரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சுமார் 10 கிராமங்களில் 7 மணி நேரம் சாலை மறியல் செய்தனர்.. இந்த சந்தேகம் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் இந்தக் கோணத்திலேயே காவல்துறை விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் முன்வைத்தனர்..
ஆனால், புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையோ நாகராஜை மட்டும் வழக்கில் சேர்த்து இதர குற்றவாளிகளை தப்பவைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மேற்படி இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும். இதில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தின் சார்பில் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி வடகாடு முக்கம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் திருவரங்குளம் ஒன்றியத் தலைவர் பி.ஸ்டெல்லாமேரி தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயில், மாவட்டச் செயலளர் டி.சலோமி, தலைவர் பி.சுசீலா, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, ஒன்றியச் செயலாளர் கே.நாடியம்மை மற்றும் நிர்வாகிகள் பேசினர். போராட்டத்தை ஆதரித்து விதொச முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பெரி.குமாரவேல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.உடையப்பன், எல்.வடிவேல், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் க.சிவக்குமார், சிபிஎம் நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.இளங்கோவன், மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த மாதர் சங்கம் தயாராக உள்ளது என்றனர்.