மத்திய சென்னை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து வாக்கு சேகரிக்க இன்று ஓபிஎஸ் வருவதாக அறிவிக்கப்பட்டது. மாலை 5.45 முதல் 6.15 வரை அமைந்தக்கரை மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்வார் என கட்சி சார்பில் அறிவித்ததால் 4.30 மணிக்கே கட்சியினர் வரத்தொடங்கினர்.
சில பொறுப்பாளர்கள், அவர்கள் கார்களில் பெண்களை ஒருத்தர் மீது ஒருத்தரை உட்கார வைத்து அழைத்து வந்தது பரிதாபமாக இந்தது. இந்நிலையில் இரவு 8.20 மணிக்கு பிரச்சார இடத்திற்கு வந்து சேர்ந்தார் ஓபிஎஸ் . அதுவரை வயதானோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடுரோட்டிலும், சாலை ஓரத்திலும் காத்துக் கிடந்தனர். இதனால் அந்த ரூட்டில் செல்ல வேண்டிய பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பப்பட்டது. இதனால் பிரச்சார இடத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு நோயாளிகள், உறவினர்கள் வந்து செல்ல மிகவும் சிரமப்பட்டார்கள்.
இதற்கிடையே கூட்டத்திற்கு வந்திருந்த குழந்தைகள் பசியில் வாடி போயினர். இதனால் கடுப்பான பெண்களில் சிலர் எங்களுக்கு பிரச்சாரமே வேண்டாம் என வீட்டிற்கு கிளம்பி விட்டனர். ஓபிஎஸ் வந்தவுடன் 10 நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு "நிறைய இடத்தில் பேச வேண்டியிருப்பதால் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்" என்று கும்பிடு போட்டு கிளம்பினார். இதனால் வந்திருந்த கட்சியினரும் பொதுமக்களுக்கும் "இதுக்கா இவ்ளோ அலப்பரை " என்று புலம்பிய படியே சென்றனர்.