திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (14.10.2023) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்தார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் தோழர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 9 பெண் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணர்வு என்ற பெயரால் என்று ஒற்றை ஆட்சியைக் கொண்டு வர பிரதமர் மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அது நடந்தால் ஒரே மனிதர் என்ற எதேச்சதிகாரத்திற்கு வழிவகுக்கும். எனவே தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை முற்றிலும் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பெண்களை ஏமாற்றத்தான் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தது போன்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 33 சதவீதம் இட ஒதுக்கீடு பெண்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்ற சதி எண்ணத்தோடு தான் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர் என நான் கருதுகிறேன். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தைக் கொண்டு வந்திருந்தால் பிரதமர் மோடியைப் பாராட்டி இருக்கலாம். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு கப்சா சட்டம்” எனப் பேசினார்.