திருச்சி மாநகராட்சியானது தற்போது 65 வார்டுகளோடு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகலோடு கூடுதலாக 35 வார்டுகள் இணைக்கப்பட்டு மொத்தம் 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்ய உள்ளதாக மாநகராட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல கிராமங்களிலிருந்து பெண்கள் இன்று அணிதிரண்டு கையில் பதாகைகளோடு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தங்களுடைய கிராமப் பகுதிகளை ஒருபோதும் மாநகராட்சியோடு இணைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பெண்கள் ஒவ்வொருவரும் மனு அளித்து வருகின்றனர். அதில் மல்லியம்பத்து ஊராட்சி கிராம பொதுமக்கள் கூறுகையில், “எங்களுடைய ஊராட்சிகள் 463 ஏக்கர் நஞ்சை நிலமும் 45 ஏக்கர் புஞ்சை நிலமும் உள்ள விவசாய நிலங்கள் சூழ்ந்த பகுதியில் உள்ளது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். அது மட்டுமல்லாமல் நூறு நாள் வேலைத்திட்டத்தை நம்பி பெரும்பாலான குடும்பங்கள் மகளிரை தலைவராகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் இதில் உள்ளது.
மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி முற்றிலும் விவசாயம் அழிந்து விடும். இதனால் அதனை நம்பியுள்ள விவசாயிகள் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி விடும். எனவே மாநகராட்சி எல்லையில் எங்களுடைய மல்லியம்பத்து ஊராட்சி சேர்க்கப்பட்டால் நூறு நாள் வேலைத் திட்டமும் பறிக்கப்படும் எனவே ஒருபோதும் எங்களுடைய ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்க விடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளனர்.