விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது பெரும்புகை கிராமம். இந்தக் கிராமத்தின் அருகே உள்ள மலையில் கல்குவாரி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் கல் குவாரியை அப்பகுதியைச் சேர்ந்த முருகபாண்டியன் என்பவர் எடுத்து நடத்திவருகிறார். இந்தக் குவாரியில் அவ்வப்போது வெடிவைத்து, கற்களை உடைத்து லாரிகளில் விற்பனைக்கு அனுப்புவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், நேற்று (11.07.2021) குவாரி அருகில் உள்ள ஊரணி தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி செல்வி (50), தங்களுக்கு சொந்தமான வயலில் விவசாய வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது கல்குவாரியில் வைத்த வெடி வெடித்ததனால் பாறை போன்ற கற்கள் சிதறி பறந்து சென்று சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு அப்பால் வயலில் வேலை செய்துகொண்டிருந்த செல்வியின் தலையில் விழுந்தது. இதில் அவரது தலை சுக்கு நூறாக சிதறியது. ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செஞ்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சக்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தலை சிதறிய செல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்தனர்.
அப்போது அங்கு திரண்ட செல்வியின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து குவாரி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து செல்வியின் உடலுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு செல்வியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்வதற்கு பொது மக்கள் அனுமதித்தனர். அதன்பிறகு செல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த செஞ்சி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். வெடி வைத்து உடைத்தவர்களின் அலட்சியம் காரணமாக வயலில் வேலை செய்துகொண்டிருந்த செல்வி பலியாகியுள்ளார். இது அவர்களின் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது. எனவே விழுப்புரம் மாவட்டத்தில் இதுபோன்று கல்குவாரிகள் நிறைய உள்ளன. அவை உரிய பாதுகாப்புடன் செயல்படுகிறதா என்பதை ஆராய்ந்த பின் அனுமதி அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.