
‘தமிழ்க் கடவுள்’ என போற்றப்படும் முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, பழனி, சுவாமிமலை ஆகியவை ஆறுபடை வீடுகள் ஆகும். இவற்றில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் ஹிந்தி மொழியில் கல்வெட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தக் கல்வெட்டு வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில் கூறியதாவது, “அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூரில், தமிழ் கடவுள் முருகனின் ஆலயத்தில், திடீரென இந்தி கல்வெட்டுகள் முளைத்துள்ளதாக இன்று ஏடுகளில் வந்துள்ள செய்தியால், உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கொதித்துப்போயிருக்கிறார்கள். கொதிநிலையை அறிவதற்கு, குரங்கு தன் குட்டியின் கையை எடுத்துச் சுடும் நீரில் வைத்துப் பார்ப்பது போல, ஆதிக்க உணர்ச்சிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்க, இந்தக் கல்வெட்டு மோ(ச)டி வித்தையை, அரங்கேற்றி உள்ளனர்.

இதை யார் வைத்தார்கள், எப்போது வைத்தார்கள், என்ன நோக்கத்திற்காக வைத்தார்கள்? இந்தி ஆதிக்க சக்திகள் நடத்தும் கொல்லைப்புற ஏற்பாடுகளுக்கு, எந்தவிதத்திலும் தமிழ்நாட்டு அரசு இம்மி அளவும் இடம்தரக் கூடாது. திருச்செந்தூருக்கும் வட ஆரியத்திற்கும் எந்தக் காலத்திலும் எந்தத் தொடர்பும் இல்லை. இத்தகைய கல்வெட்டுகளுக்கு இடம் அளித்து, எதிர்காலத்தில் வரலாற்றைத் திரித்துக் கூறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாது. தமிழ்நாட்டில், 1938இல் தொடங்கிய மொழிப்போர்க் கனல், நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் இராஜாஜியும், தலைவர் கலைஞரும் போர்க்கொடி ஏந்திய உணர்வு கொஞ்சமும் மங்கிவிடாமல், மானம் உள்ள தமிழ் மக்கள் இன்றைக்கும் போர்க்களம் புகுவதற்கு துடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக, ஆட்சியாளர்கள், அந்தக் கல்வெட்டுகளை உடனே அகற்ற வேண்டும். திருச்சீர் அலைவாய் என்று போற்றப்படும் செந்தில் ஆண்டவனின் சன்னிதியில், இந்திக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். வேல் ஏந்தி, சூரனை வதைத்து, கோவில் கொண்டிருக்கிற செந்தூர் ஆண்டவன் கோவிலுக்கு, மக்கள் கால்நடையாகவே வந்து வணங்கி வழிபட்டு, தமிழர் பண்பாட்டையும், மரபையும் பேணிக் காத்த மண்ணில், இந்தியைத் திணிக்க முயல்வதை நொடிப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள்தான் ஆட்சி மொழிகள் என பேரறிஞர் அண்ணா, 1967 ஆம் ஆண்டு சட்டம் இயற்றினார்கள். அதை இனி யாராலும் மாற்ற முடியாது என்றும் உறுதிபட அறிவித்தார்கள். அந்தச் சட்டம்தான் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது. அதன்படி, அந்தக் கல்வெட்டுக்கு அங்கே இடம் கிடையாது. எனவே, அவற்றை அகற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை, உடனடியாக அகற்றுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.