கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது அணைக்கட்டு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 66 வயதான கிருஷ்ணமூர்த்தி. இவர் அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர் அணைக்கட்டு பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி மனைவியுடன் வசித்துவருகிறார். இவரது மனைவி கடந்த 18ஆம் தேதி விவசாய வேலைக்காக வயலுக்குச் சென்றபோது, அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை அழைத்துக்கொண்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (19.08.2021) தனது மனைவிக்குத் தேவையான துணிமணிகளை எடுத்துச் செல்வதற்காக கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டிற்குத் திரும்ப வந்துள்ளார். அப்போது அவர் வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டு, படுக்கை அறையிலிருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தன. மேலும், பீரோவின் உள் அறைக்குள் இருந்து 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விசாரணை நடத்தியுள்ளனர்.
திருக்கோவிலூர் டிஎஸ்பி கங்காதரன், காவல் ஆய்வாளர் பாபு, உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்களைத் தீவிரமாக தேடிவருகிறார்கள். இதேபோன்று சின்னசேலம் அருகே சில தினங்களுக்கு முன்பு அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. இதே திருக்கோவிலூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. தற்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசு ஊழியர் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீடுகளாகப் பார்த்து கொள்ளையர்கள் திட்டமிட்டுக் கொள்ளையடிப்பதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் எங்கே தங்கள் வீட்டில் கொள்ளையடிக்க வந்துவிடுவார்களோ என்று திகிலில் உறைந்துபோய் உள்ளனர்.