
நாகையில் வருமானவரித்துறை அதிகாரி போல நடித்து ஓய்வுபெற்ற நடத்துநரிடம் 45 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மோசடிக் கும்பலின் தலைவியை தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர். நாகை அடுத்துள்ள பால்பண்ணைச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற நடத்துநரான சுப்ரமணியன். இவரிடம் நாகை ஆண்டோ சிட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரும் அவரது குடும்பத்தினரும் நட்போடு மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர்.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ராஜேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் போலியாக வருமானவரித்துறை அதிகாரிகளைப் போல் நடித்து, நடத்துநர் சுப்ரணியணிடம் சுமார் 45 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். பணம், நகை ஏமாற்றியது ராஜேஷ்வரிதான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுப்ரமணியன் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேஸ்வரி உள்ளிட்ட 9 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், ராஜேஸ்வரி தஞ்சைப் பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் அவரை நள்ளிரவில் கைதுசெய்து நாகை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதில், நடத்துநர் சுப்ரமணியனிடம் கொள்ளையடித்தது மற்றும் காரைக்காலில் பல்வேறு நபர்களை ஏமாற்றிய புகார்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறை அதிகாரிகளைப் போல வந்து 45 லட்சத்தை கொள்ளையடித்த பெண்ணின் செயலால், நாகையே பரபரத்துக்கிடக்கிறது.