கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் அத்திப்பாக்கம் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் பரந்து விரிந்த வனப்பகுதிக்கு சொந்தமான காடுகள் ஏராளம் உள்ளன. பகல் நேரத்தில் கூட இப்பகுதிக்கு ஆடு, மாடு மேய்க்க செல்பவர்கள் அச்சப்படும் அளவிற்கு ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதி. அப்படிப்பட்ட இந்தப் பகுதியில் கடந்த 14ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதனை ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் பார்த்துவிட்டு காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரியப்படுத்தினர்.
இதையடுத்து மணலூர்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தனிப்படை அமைத்து, எரிந்த நிலையில் கிடந்த பெண் யார், எந்த ஊர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், அந்தப் பெண் அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வையாபுரி மனைவி பார்வதி (80) என்பது தெரியவந்துள்ளது.
பார்வதி வயதான காலத்தில் வனத்துறைக்கு சொந்தமான அந்த காட்டுப் பகுதிக்கு ஏன் சென்றார்? அல்லது தற்கொலை செய்துகொள்ள சென்றாரா? இல்லை யாராவது அவரைக் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மர்மம் நிறைந்த வனப்பகுதியில் 80 வயது மூதாட்டி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.