அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரின் மனைவி சங்குபதி (50 வயது), பழனி பாதயாத்திரை செல்வதற்காகக் கரைவெட்டி கிராமத்தில் இருந்து 40 பேருடன் சென்றுள்ளார். முதுவத்தூர் கிராமத்தில் இருந்து கல்லக்குடிக்கு இரவு 7.45 மணிக்கு சங்குபதி, பாதயாத்திரை குழுவோடு பயணித்தபோது முதுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (32) மற்றும் அவரது நண்பர் முத்துக்குமார் (30) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து பின்புறமாக மோதியுள்ளனர்.
இதில், அரியலூர் மாவட்டம், கரைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சங்குபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இதுகுறித்து திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லால்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு சங்குபதியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இறந்து போன சங்குபதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சங்குபதியின் கணவர் பழனியப்பன், கடந்த 2019ல் ஓட்டுநர் பணியில் இருந்தபோது மாரடைப்பால் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தமகன் பெயர் ராம்குமார் (34) கோயம்புத்தூரில் நர்சரி கார்டனில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். கார்த்திக் (30) விவசாயப் பணி செய்து வருகிறார்.