அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசிக்கலாம் என்ற தீர்ப்பு கடந்த செப்.28-ந் தேதி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வெளியிட்டது. கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவிர மற்ற அனைத்து தரப்பு மக்களும், இந்த தீர்ப்பை எதிர்க்கின்றனர். ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயனோ “உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே தீருவோம். மதத்தின் பெயரால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நாட்டை துண்டாட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று கொக்கரிக்கிறார்.
கடந்த ஐப்பசி ஒன்றாம் தேதி முதல் 5 நாட்கள் சபரிமலை நடை திறக்கப்பட்டது. அதன் பிறகு சித்திர ஆட்ட திருநாள் சிறப்பு பூஜைக்காக 2 நாட்கள் நடை திறக்கப்பட்டது. இந்தகால கட்டத்தில் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட எந்த பெண்களும் சந்நிதானத்தில் அனுமதிக்கப்படவில்லை. அய்யப்ப தர்மசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகளின் போராட்டம் காரணமாக நிலக்கல், பம்பை, சன்னிதானம் போன்ற இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கமாண்டோ படையும் நிறுத்தப்பட்டிருந்தது.
முற்போக்கு சிந்தனைவாத எண்ணம் ரொகானா பாத்திமா, ஆந்திர பத்திரிக்கையாளர் கவிதா, சேர்த்தலையை சேர்ந்த அஞ்சு உள்ளிட்ட பெண்கள் நடுவழியில் திருப்பி அனுப்பபட்டனர். ஆர்வக்கோளாறு காரணமாக வந்த பாலம்மா, ஆதிசேஷி, வசந்தி போன்ற பெண்களும் போராட்டக் குழுவின் கோரிக்கையை ஏற்று திரும்பிச் சென்றனர். அதிரடிப்படை சூழ அழைத்து செல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர்களும், போராட்டக்குழுவின் மிரட்டல் காரணமாக திருப்பி அனுப்பபட்டனர்.
ஆகமவிதிகளை மீறி கோவிலுக்குள் பெண்கள் நுழைய முற்பட்டால், நடையை சாத்திவிடுவோம் என்று சபரிமலை மேல்சாந்தி எச்சரித்தார். பந்தளம் மன்னர் குடும்பமும், ஆரம்பம் முதலே பெண்களை அனுமதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு காட்டி வருகிறது. கேரளத்தில் உள்ள பிஜேபிக்கு இந்த விவகாரம் லட்டு மாதிரி கிடைத்துவிட்டதால், இதை வைத்து அரசியல் செய்கின்றன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் சென்னிதாலாவும், பெண்களை அனுமதிக்கும் எதிர்ப்பு காட்டி வருகிறார். பினராயி விஜயனும் பிடி கொடுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக காய் நகர்த்தி வருகிறார்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை 13-11-2018 விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, அடுத்தகட்ட விசாரணையை வருகிற ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதுவரை ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடையில்லை என்றும், அனைத்து வயது பெண்களும் அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்தலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு தான் பிரச்சனையே.!!!
எப்படியும் இளவயது பெண்கள் தரிசனத்திற்கு தடை கிடைத்துவிடும் என்று நம்பியிருந்த அய்யப்ப பக்தர்களுக்கு, இந்த உத்தரவு அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. நைஷ்டிக பிரம்மச்சரியம் என்பதுதான் அய்யப்பனின் முக்கிய தத்துவம். எனவே, இளவயது பெண்களை சன்னிதானத்திற்குள் அனுமதிக்க கூடாது என்பது அவர்கள் கோரிக்கை. ஆனால், அதனை கருத்தில் கொள்ளாமல் மனுவை ஜனவரி 22-ந்தேதிக்கு ஒத்திவைப்பது எந்த விதத்தில் நியாயம் என்கிறார்? நம்மிடம் பேசிய அய்யப்ப பக்தர்.
அவரே தொடர்ந்து, “ஏற்கனவே, 5 நாட்கள் நடை திறக்கப்பட்டபோதே, சபரிமலை கலவர பூமியானது. இனி கார்த்திகை ஒன்றாம் தேதி மண்டல பூஜை, அதை தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக நவ.17 முதல் ஜனவரி 20 வரை நடை திறக்கப்பட்டிருக்கும். எனவே, பெண்களை அனுமதித்தால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்பதே ரிவியூ பெட்டிசனின் பிரேயர். ஆனால் இதை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. இதனால், மீண்டும் கடவுளின் தேசம் கலவர தேசமாக மாறிவிடும் சூழல் இருக்கிறது’’ என்றார்.
‘’ செப்.28-ந்தேதி நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குப் பிறகு, கருத்துக் கூறிய 95 சதவிகிதம் பெண்கள், ‘நாங்கள் குறிப்பிட்ட வயதிற்குள் சபரிமலை போக விரும்பவில்லை’ என்றுதான் கூறினார்கள். ஒரு சில பெண்ணியவாதிகள் தான், வீம்புக்கு வந்தார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டும், அடம்பிடித்து வந்த பெண்களின் எண்ணிக்கையே 10-க்கு உள்ளே தான் இருக்கும். ஆனால், லட்சக்கணக்கான பக்தர்களின் கோரிக்கையை நீதிமன்றமும், பினராயி அரசும் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறது?’’ என்றார் மற்றொரு பக்தர்.
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டதால், இனி சிலர் வீம்புக்காக சபரிமலைக்கு வருவார்கள், ஊடகங்களும் வருவார்கள், இதனால், மீண்டும் 144 தடை உத்தரவு, தடியடி போன்ற சம்பவங்கள் தொடரும் என்பதை நினைக்கும்போதே அச்சம் எழுகிறது. ஏற்கனவே புயலால் சேதமடைந்த பம்பை இன்னும் மறு சீரமைக்கப்படவில்லை. இதனால், அனைத்து வாகனங்களும் நிலக்கல்லில் நிறுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
மேலும், சோதனை என்ற பெயரில் அனைத்து பக்தர்களும் நிலக்கல்லில் நிறுத்தப்பட்டு, அனுப்பி வைக்கப்படுவார்கள். இதனால், விரதமிருந்து வரும் அய்யப்ப பக்தர்க்களுக்கு தேவையில்லா மன உளைச்சலும், கால விரயமும் ஏற்படும். இதை எல்லாம் கேரள அரசு கவனத்தில் கொள்ளுமா என்பதுதான், கார்த்திகை ஒன்றாம் தேதி மாலையிடும் அய்யப்ப பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.