Skip to main content

தற்கொலைக்கு காரணமானவர்களை காப்பாற்ற மிரட்டல் விடுத்த ஆய்வாளர்..! நக்கீரன் ஆக்ஷன் ரிப்போர்ட்..!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

Woman passes away in chennai mgr nagar.. police investigation

 

கடந்த ஜூலை 9ஆம் தேதி நமக்கு வந்த அந்த அழைப்பில் பேசிய நபர், “என் பெயர் ராஜன். என் மனைவி ரேணுகா. கடந்த ஜூலை 8ஆம் தேதி தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன், இதற்கு காரணம் அவர் வேலை செய்துகொண்டிருந்த ஹெல்த் அபோ சிக்ஸ்டி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன் மற்றும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த காவியா இருவரும்தான் என்று கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

 

Woman passes away in chennai mgr nagar.. police investigation

 

தற்கொலைக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னால், என் மீதே வழக்கு போடுவேன் என்று ஆய்வாளர் கிருஷ்ணன் மிரட்டினார். நான் சென்னை, எம்.ஜி.ஆர் நகர், பெரியார் தெருவில் இரண்டு மகள்கள் மற்றும் மாமியார் என குடும்பத்துடன் வசித்துவருகிறேன். கடந்த ஜூலை 8ஆம் தேதி மதியம் மூன்று மணியளவில் வெளியே சென்று வீடு திரும்பினேன். என் மனைவி எங்கே என்று கேட்டதற்கு, “அம்மா தூங்குகிறார்” என்று என் மகள் கூறினார். 

 

நீண்டநேரம் ஆனதால் கதவைத் தட்டினேன். ஆனால், நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்துப் பார்த்தேன். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக கயிறை அறுத்து, பக்கத்துல இருக்கும் கே.எம். மருத்துவமனைக்குத் தூக்கிட்டுப் போனோம். ஆனா அவுங்க ரேணுகா ஏற்கனவே இறந்துவிட்டார் என்றனர். அதனைத் தொடர்ந்து போலீசுக்குத் தகவல் கொடுக்கவே, போலீசார் பிணத்தைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  

 

Woman passes away in chennai mgr nagar.. police investigation

 

என் மனைவி ரேணுகா தற்கொலை செய்துகொண்டதற்கு முன் எழுதிய கடிதத்தில், அவர் வேலை செய்துவந்த அசோக் நகரில் இயங்கிவரும் ஹெல்த் அபோ சிக்ஸ்டி நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் சீனிவாசன் மற்றும் காவியா இருவரும்தான் காரணம் என்று எழுதியிருந்தார். அதனால் போலீசில் அளித்த புகாரில் என் மனைவி தற்கொலைக்கு காரணமான அந்த இருவர்மீதும் நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தேன். ஆனால் எம்.ஜி.ஆர். நகர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணன், புகார் வாங்க மறுத்துவிட்டார். மாறாக என் மனைவி மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக புகாரை எழுதி கொடுக்கச் சொன்னார். 

 

நான் மறுக்கவே அன்று என் புகாரை வாங்காமல் அனுப்பிவிட்டார். மீண்டும் அடுத்த நாள் காலை அவரை சந்தித்தோம். அவரோ, "நான் சொல்ற மாதிரி புகார் கொடுத்தால்தான் பிணத்தை பிரேதப் பரிசோதனை செய்ய எஃப்.ஐ.ஆர் தருவேன். இல்லையென்றால் முடியாது என்று எங்களிடம் காட்டமாக பேசினார். வேறு வழி தெரியாமல் நக்கீரனை தொடர்புகொண்டோம்” என்றார். 

 

உடனே களத்தில் இறங்கியது நக்கீரன். முதலில் ஆய்வாளர் கிருஷ்ணனிடம் பேசினோம், சரியாக பதில் கூறாத காரணத்தால் தி.நகர் துணை கமிஷ்னர் அரிகிரன் பிரசாத்திடம் தெரிவித்தோம். உடனடியாக அந்தப் புகாரை வாங்கிக்கொண்டு, பிணத்தைப் பிரேதப் பரிசோதனை செய்ய எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

 

அதன்படி வழக்குப் பதிவுசெய்து, ரேணுகாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியவர்கள் மீது, தான் இறந்த பின்பாவது நியாயம் கிடைக்கும் என்று விரிவாக காரணத்தைத் தெளிவுப்படுத்தி கடிதம் எழுதிவிட்டு தன் உயிரை விட்ட ரேணுகாவின் கோரிக்கை மீது கிருஷ்ணன் போன்ற காவல் ஆய்வாளர்கள், அது பெரிய நிறுவனம் என்ற சப்பைக்கட்டு கட்டி வழக்கை எளிதில் முடிக்க, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றவாளிகளைக் காக்கும் கரங்களாக உள்ளார்கள் என்பது வேதனைக்குரியது.

 

 

சார்ந்த செய்திகள்