அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி நித்தியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சக்திவேல் மலேசியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். அங்கிருந்து அவர் அனுப்பும் பணத்தை கொண்டு நித்தியா தனது மகன்களை படிக்க வைத்து வருகிறார். அதோடு குடும்ப பொறுப்புகளையும் கவனித்து வந்துள்ளார்.
காருகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஹானஸ்ட் ராஜ். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். அதன் காரணமாக இவர் மேலக்குடிக்காடு பகுதிக்கு அடிக்கடி ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போ நித்தியாவுக்கும் ஆனஸ்ட்ராஜ்க்கும் இடையே அறிமுகமாகி நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. கணவர் வெளிநாட்டில் இருப்பதால் நித்தியா அவ்வப்போது ஆனஸ்ட்ராஜ் உடன் தனிமையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் குடும்பத்தின் நிலவரத்தை உணர்ந்த நித்தியா, ஆனஸ்ட்ராஜ் உடனான உறவை கைவிட முடிவு செய்தார். ஆனால், அவ்வப்போது ஆனஸ்ட் ராஜ் செல்போன் மூலம் நித்தியாவை தனிமையில் இருப்பதற்கு அழைத்துள்ளார். நித்தியா மறுத்து வந்துள்ளார். ராஜ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த நித்தியா, ஹானஸ்ட் ராஜிடம், ‘நீ எனக்கு இனிமேல் தொந்தரவு கொடுத்தால் நமக்குள்ள உறவை குறித்து உனது மனைவியிடம் தெரிவிப்பேன்’ என்று கோபத்துடன் கூறி மிரட்டியுள்ளார்.
இதில் கோபமடைந்த ஹானஸ்ட் ராஜ், நேற்று முன்தினம் மேலக்குடிக்காடு கிராமத்திற்கு சென்று அரிவாளால் நித்தியாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு நேரடியாக தா.பழூர் காவல் நிலையம் சென்று போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் நித்தியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட ஹானஸ்ட் ராஜ், நித்தியா கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தையும் கூறியுள்ளார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நித்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரணடைந்த ஆனஸ்ட் ராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் சிறையில் அடைத்துள்ளனர்.