Skip to main content

கர்ப்பிணியை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்; கணவருக்கும் கொலை மிரட்டல்!

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

woman met struggle with two person in namakkal

 

நாமக்கல் அருகே, வீட்டில் தனியாக இருந்த கர்ப்பிணி பெண்ணை, குடிக்க தண்ணீர் கேட்டு வந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியதோடு, அவருடைய கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிப்பாளையத்தைச் சேர்ந்த கஸ்தூரி (50) மகள் சவுமியா (25). இவருக்கும், உலகப்பம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு (26) என்பவருக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பிரபு, ஆட்டோ ஓட்டி வருகிறார். சவுமியா தற்போது 3 மாத கர்ப்பமாக இருக்கிறார். நேற்று கடந்த 11ம் தேதி காலை இவருடைய வீட்டுக்கு மர்ம நபர்கள் இருவர் வந்தனர். அவரிடம், தாகமாக இருக்கிறது. குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதை நம்பி சவுமியாவும் தண்ணீர் கொண்டு வருவதற்காக வீட்டுக்குள் சென்றார். 

 

அவரை பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற மர்ம நபர்கள், சவுமியாவை திடீரென்று தாக்கினர். வீட்டுக்குள் மிதிவண்டிக்கு காற்று அடிக்கும் உபகரணம் இருந்தது. அதை எடுத்து, கர்ப்பிணி என்றும் பாராமல் ஈவிரக்கமின்றி அவருடைய வயிற்றிலேயே மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டது. அப்போது அவர்கள், இதே நிலைமைதான் உன் புருஷனுக்கும் நடக்கும் என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

 

சவுமியாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை முடிந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

 

அங்கு சென்று ஒரு மணி நேரமாக மருத்துவர்கள், இதர ஊழியர்கள் சவுமியாவுக்கு என்ன நடந்தது என்றுகூட கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. ஒரு மணி நேரம் கழித்தே அவருக்கு படுக்கை தரப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அவருக்கு ஸ்கேன் எடுத்த பிறகு, இரவு 7 மணி வரையிலுன் அதன் அறிக்கை குறித்தோ, உதிரப்போக்கால் அவதிப்படும் சவுமியாவின் உடல்நிலை குறித்தோ மருத்துவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை என உறவினர்கள் கூறுகின்றனர். 

 

இதனால் நம்பிக்கை இழந்த உறவினர்கள், சவுமியாவை அங்கிருந்து வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர். ஆனால் டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என அரசு மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. 

 

இதையடுத்து உறவினர்கள், ஊர் பொதுமக்கள் அரசு மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து அங்கேயே தரையில் அமர்ந்து திடீரென்று போராட்டத்தில் இறங்கினர். தகவல் அறிந்து அங்கு வந்த மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுமதி, புறநகர் காவல்நிலைய எஸ்.ஐ. ரஞ்சித்குமார் மற்றும் காவலர்கள் சவுமியாவின் உறவினர்கள் மற்றும் மருத்துவர்களிடம் விசாரித்தனர். முறையாக சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். 

 

இது ஒருபுறம் இருக்க, கர்ப்பிணியை தாக்கிய மர்ம நபர்கள் யார்? அவர்கள் எதற்காக சவுமியாவை தாக்க வேண்டும்? மர்ம நபர்கள் சவுமியாவின் கணவருக்கு ஏன் எச்சரிக்கை விடுக்க வேண்டும்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

கர்ப்பிணி பெண் தாக்கப்பட்ட சம்பவம் எலச்சிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்