சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதால் சமீப காலமாக தமிழக காவல்துறை இ-மெயில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வரும் தகவலை நம்பி உடனே யாரும் ஏமாந்து விடாதீர்கள் என்று அடிக்கடி மக்களிடம் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் குமரி மாவட்டம் கப்பியறையைச் சேர்ந்த 61 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இ-மெயிலில் வந்த ஒரு தகவலின் அடிப்படையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எபூக்கா பிரான்சீஸ் என்பவரிடம் ரூ.51.60 லட்சத்தை இழந்துள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீசார் கூறும் போது, “அப்பெண்ணின், 10-ம் வகுப்பு படிக்கும் பேத்தி 14.8.2020 அன்று ஆன்லைன் வகுப்பில் இருக்கும் போது ஒரு இ-மெயிலில் ஜெனிபர் வில்லியம் லண்டன் என்ற பெயரில் வந்த மெசேஜில் தொழில் அதிபரான எனது கணவர் புற்று நோயால் இறந்து விட்டார். எங்களுக்கு குழந்தைகள் இல்லாததால் எங்களுக்கு அமெரிக்க டாலர் 3,90,0000 மதிப்பில் சொத்து உள்ளது. இந்திய மதிப்பில் 30 கோடியே 15 லட்சம். இதை இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு கொடுக்க உள்ளேன். அதை உங்கள் மூலம் அங்கு செலவு செய்யுங்கள். அது பற்றி முழு விவரத்தையும் செல்போன் மூலம் பேச எண்ணும் பதிவு செய்யபட்டியிருந்தது.
உடனே அந்தச் சிறுமியும், அவரது பாட்டியும் அந்த செல்போன் எண்ணில் தொடர்புக்கொண்டு பேசியுள்ளனர். மறு முனையில் ஆங்கிலத்தில் பேசிய பெண் குரல், அந்த முழு தொகையும் உங்கள் வங்கி கணக்குக்கு செலுத்திவிடுகிறோம். இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியையும் பெற்றுவிட்டோம் எனக் கூறி, ரிசா்வ் வங்கியின் அனுமதி பெற்றதற்கான முத்திரையிடப்பட்ட சில ஆவணங்களையும் இ-மெயிலில் அனுப்பியுள்ளார்.
மேலும் பாதி தொகையை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் மீதி தொகையை ஏழைகளுக்கு செலவு செய்துவிட்டு மெயிலில் அந்தத் தகவலை மட்டும் அனுப்பினால் போதும் என்றதும் இதையெல்லாம் முழுமையாக நம்பிய அந்தப் பெண்ணும் சிறுமியும் அதற்கு இனி என்ன செய்ய வேண்டுமென்று கேட்டுள்ளனர். அதற்கு மொத்த பணத்தையும் நீங்க பெற 52 லட்சம் ரூபாய் வரி மட்டும் கட்டினால் போதும் எனக் கூறி அவரது வங்கி கணக்கை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த வங்கி கணக்கில் பல தவணையாக மொத்தம் 51 லட்சத்து 60 ஆயிரத்தை செலுத்தியுள்ளார் அந்த மூதாட்டி. அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் போனதையடுத்துதான், அவர்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதை உணா்ந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார். அதன்படி சைபர் க்ரைம் ஏ.டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையிலான டீம் விசாரணை மேற்கொண்டனர். இதில் இ-மெயில் முகவரி, செல்போன் அழைப்பு அதன் சிக்னல், வங்கி கணக்கு எண் உள்ள கிளையை ஆய்வு செய்ததில் அது உத்தரபிரதேசம் நொய்டா பகுதியைக் காட்டியது. மேலும் அப்பெண் பேசிய செல்போன் எண்ணில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பல எண்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதன் மூலம் தீவிர விசாரணையின் படி நொய்டாவில் பதுங்கியிருந்து, அந்த மோசடி வேலையில் ஈடுபட்டு வந்த நைஜீரியாவைச் சேர்ந்த எபூக்கா பிரான்சிஸ்சை சைபா் க்ரைம் போலீசார் கைது செய்தனர். இவர் நைஜீரியாவில் இருந்து 2016-ல் இந்தியா வந்து டெல்லி, ஹரியனா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது பலரை நண்பர்களாக்கியுள்ளார். அவர்கள் இவரின் மோசடி செயலுக்கு உதவியாக இருந்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து லேப்டாப், 7 செல்போன்கள், சிம் கார்டுகள், மோடம் ஆகியவை கைப்பற்றபட்டது. அவர் பெண் குரல் பேசும் செயலி மூலம் பெண்களிடம் பேசியது தெரியவந்துள்ளது. மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்கள்.