தேனியில் போலி சான்றிதழ் மூலம் பெண் ஒருவர் 24 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜயபானு(47) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் விஜயபானு போலி சான்றிதழ் கொடுத்து மோசடி செய்து ஆசிரியர் வேலையில் சேர்ந்ததாக மாவட்டக் கல்வி அலுவலகத்திற்குப் புகார் வந்துள்ளது. புகாரின் பேரில் மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், விஜயபானு தனது 12 ஆம் வகுப்பு சான்றிதழைப் போலியாகக் கொடுத்து மோசடி செய்து 1999 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தேனி மாவட்டக் கல்வி அலுவலர் கலாவதி, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜயபானு மீது புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கண்டமனூர் போலீசார் அரசு நிர்வாகத்தை ஏமாற்றுவது, போலியாக ஆவணங்களைத் தயாரிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.