மயிலாடுதுறை அருகே கணவனை இழந்த பெண்ணுக்கு கணவரின் தம்பி பாலியல் தொல்லை கொடுப்பதாக, குழந்தையோடு மாவட்ட எஸ்.பி.யிடம் மண்டியிட்டு, கருணைக் கொலை செய்திடுமாறு கண்ணீர் மல்கப் பெண் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை அருகே கீழையூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவருக்குக் கடந்த 2015 ஆம் ஆண்டு கயல்விழி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மனோகரன் உயிரிழந்த நிலையில், பின்னர் தாயார் வீட்டில் தனது இரண்டு குழந்தைகளுடன் கயல்விழி வசித்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில் கணவர் மனோகரனின் தம்பி கலைச்செல்வம் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்வதாகவும், தொடர்ந்து தொலைப்பேசியில் தரக்குறைவாகப் பேசுவதாகவும், சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் வழக்கம்போல் நடவடிக்கை எடுப்பதற்கான முக்கியமான கவர் இல்லாததால் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலத்தைக் கடத்தியுள்ளனர். இதனைச் சாதகமாக்கிக் கொண்ட கலைச்செல்வம், தொடர்ந்து தொல்லை கொடுத்தபடியே இருந்துள்ளார்.
இந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார் கயல்விழி. அப்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மீனாவிடம் காலில் விழுந்து தன்னைக் கருணைக் கொலை செய்திடுமாறு பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தனக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளித்திடும்படி கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தார். மனுவினைப் பெற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு டி.எஸ்.பி. சஞ்சீவ்குமாருக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.