பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு காவல் நிலைய பகுதியில் துணை சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இங்கு துணை சூப்பிரண்டாக பணியில் உள்ளவர் சந்தியா(28). இவர், நேரடி டிஎஸ்பி ஆக கடந்த ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார்.
கோவை மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர், தற்போது திருச்சி மாவட்டம் நாவல்பட்டு பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தமிழக டி.ஜி.பிக்கு டி.எஸ்.பி சந்தியா ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தற்போது அந்தக் கடிதத் தகவல் வெளியாகி காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கடிதத்தில், ‘எனக்கு மன அழுத்தம், பணிச்சுமை, குடும்பச் சூழ்நிலை இவற்றை தாங்க முடியவில்லை. இதில் பணிச்சுமை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனம் பேதலித்து உள்ளது. தயவுசெய்து எனது உயிரை காப்பாற்றுங்கள். பணி சுமை குறைந்த இடத்தில் என்னை பணியிடமாற்றம் செய்யுங்கள்’ என டி.எஸ்.பி சந்தியா குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் காவல்துறையினர் வட்டாரத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற கடிதத்தைப் பலமுறை டி.எஸ்.பி சந்தியா, உயரதிகாரிகளுக்கு எழுதியதாகவும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இவருக்கு திருமணம் நடந்து ஒரு வருடத்துக்கு மேலாகிறது. இவரது கணவரும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்து வருவதால் பணிச்சுமை, குடும்பச்சுமை, இவைகள் எல்லாம் சேர்ந்து காவல்துறை அதிகாரி சந்தியாவிற்கு குழப்பமும், மன உளைச்சலும் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.