Skip to main content

தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்... பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தற்கு உறுதி அளித்த அமைச்சர்!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

Woman who died due to mistreatment ... Minister who negotiated

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தனது மனைவி இறந்துபோனார் எனக்கூறி செஞ்சி அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்களுடன் கணவர் முற்றுகை போராட்டம் நடத்தினார். செஞ்சி அருகே உள்ள இல்லோடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு (39). இவருடைய மனைவி கங்கா (எ) கவிதா (38). இவரது கைவிரலில் நகசுத்தி ஏற்பட்டதால், அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு காந்தி பஜாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.

 

முதல்முறை அவருக்கு சிகிச்சை அளித்தனர். மீண்டும் சில நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளனர். அதையடுத்து நேற்று (05.07.2021) மாலை இரண்டாவது முறையாக சிகிச்சை பெறுவதற்காக அந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் கவிதா. அங்கிருந்த மருத்துவர் கவிதாவுக்கு 3 ஊசிகள் போட்டுள்ளார். இதில் கவிதாவுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே பயந்துபோன அவரது கணவர் அன்பு மனைவியை அங்கிருந்து செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் கைவிரல் சுத்திக்காக சிகிச்சை எடுத்த பெண், உயிர் பிரியும் அளவிற்கு அந்த தனியார் மருத்துவமனை தவறாக சிகிச்சை அளித்துள்ளனர்.

 

அந்த மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அன்புவின் உறவினர்கள் செஞ்சி அரசு மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்தத் தகவல் அறிந்த செஞ்சி தொகுதி எம்.எல்.ஏவும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான மஸ்தான் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அன்பு மனைவி கவிதாவின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி, அந்தத் தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் அமைச்சர். அமைச்சரின் உறுதிமொழியை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதையடுத்து கவிதாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கவிதாவின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் கவிதாவுக்கு சிகிச்சையளித்த அந்தத் தனியார் மருத்துவமனை மருத்துவர்மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்