காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளம் பெண் வியாழக்கிழமை இரவு காவல் நிலையம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், பனையபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒருபுகார் அளித்தார். அதில் அவர், “கல்லூரியில் உடன்படித்த மாணவர் என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்வதாகவும் கூறினார். இருவரும் நெருங்கிப் பழகியதில் நான் கர்ப்பமடைந்தேன். அதை கலைக்குமாறு அவர் கட்டாயப்படுத்தினார். நான் கலைக்கவில்லை, எனவே என்னுடனான உறவை துண்டித்துவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த பெண் தனது புகார் மீது கடந்த 2 மாதங்களாக போலீஸார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினருடன் இணைந்து, தனது தாய் மற்றும் உறவினர்களுடன் வியாழக்கிழமை இரவு ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லெட்சுமி மற்றும் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.