கிருஷ்ணகிரி அருகே, பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியிடம், வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் சித்ரவதை செய்ததாக கணவர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தென்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மகள் கார்த்திகா (24). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சம்மனகவுண்டனூரைச் சேர்ந்த சிவனேசன் (24) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டு, காதலாக மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு, சிவனேசனும் கார்த்திகாவும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி ஆறு மாதம் வரை வாழ்க்கை நன்றாக சென்ற நிலையில், சிவனேசன், அவருடைய தாயார் சுதா (40), உறவினர்கள் சிவகாமி (58), சிவா (35), சக்கில்நத்தத்தைச் சேர்ந்த ஆனந்த் (27) ஆகியோர் வரதட்சணைக் கேட்டு கார்த்திகாவுக்கு தொல்லை கொடுத்து வந்தனர். கணவர், அவரை அடித்து, உதைத்துச் சித்ரவதை செய்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கார்த்திகாவிடம் 5 பேரும் வரட்சணைக் கேட்டு, அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவரை வீட்டை விட்டு விரட்டி அடித்து விட்டனர்.
இதனால் தேனி சென்ற கார்த்திகா, அங்குள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நிகழ்விடம் கிருஷ்ணகிரி எல்லைக்குள் வருவதால், இந்த புகார், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல்துறைக்கு ஆக. 11ம் தேதி மாற்றப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட அலுவலக உத்தரவின்பேரில் இந்த வழக்கு பர்கூர் மகளிர் காவல்நிலையத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில், சிவனேசன் உள்ளிட்ட புகாரில் கூறப்பட்ட 5 பேர் மீதும் பர்கூர் காவல்நிலைய காவல்துறையினர் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.