சொந்த கணவனை எதிர் வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்த பெண்ணுடன் பழகவைத்து நகை, பணத்தை ஏமாற்றி பறித்ததோடு, அந்தப் பெண்ணைக் குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்து கை, கால்களைக் கட்டி சாக்கு மூட்டையில் அடைத்துப் புதைத்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
கும்பகோணம் அடுத்துள்ள சிவபுரனி பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். அவரது மனைவி அனிதா. இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். டேவிட், வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். அனிதாவோ குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு தனியாகவே இருந்துவந்தார். அனிதா வீட்டிற்கு எதிர்வீட்டில் கார்த்தி - சத்யா தம்பதியினர் குடும்பத்தினரோடு வசித்துவருகின்றனர்.
அனிதாவும், சத்யாவும் ஒரே ஊரில் ஒரே தெருவில் பிறந்ததோடு, ஒரே வகுப்பிலும் ஒன்றாகப் படித்துள்ளனர். இருவருமே சிறுவயதிலிருந்தே நட்பாக பழகியிருக்கின்றனர். தனது தோழி வீடு என்பதால் அனிதா வீட்டிற்கு சத்யா அடிக்கடி போவதை வழக்கமாக வைத்திருந்தார். அனிதாவிடமிருந்த பணத்தின்மீதும், நகைகள்மீதும் ஆசைகொண்ட சத்யா. அதனை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று கணவனோடு சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார்.
அவர்களின் திட்டப்படியே கார்த்தியுடன், அனிதாவை அடிக்கடி சந்திக்க வைத்து அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பையும் ஏற்படுத்தியதோடு, அனிதாவிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றி நகை மற்றும் பணத்தையும் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில் அனிதாவோ, “எனது கணவர் டேவிட் வெளிநாட்டிலிருந்து வரப்போகிறார். என்னிடம் கடனாக வாங்கிய நகை, பணத்தைத் திருப்பிக் கொடுங்க” என கார்த்தியிடமும், சத்யாவிடமும் கேட்டிருக்கிறார். ஆனால், கார்த்தியும் சத்யாவும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் கார்த்தியோடு நெருக்கமாக இருந்ததை வெளியில் கூறிவிடுவோம் எனக் கூறியபடியே ஏமாற்றிவந்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரது நடவடிக்கையையும் பொறுக்க முடியாமல் திருப்பனந்தாள் போலீசாரிடம் புகார் அளிக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார் அனிதா.
அனிதா காவல் நிலையத்திற்குப் போகும் செய்தியை கார்த்தி தனது மனைவி சத்யாவிடம் கூற, அனிதாவை கொலை செய்துவிடுவோம் என கணவருடன் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார் சத்யா. அதற்கு உதவியாக கார்த்தியின் தந்தை ரகுநாதனையும், மைத்துனர் சரவணனையும் சேர்த்துக்கொண்டு கடந்த 12ஆம் தேதி வங்கிக்குச் சென்ற அனிதாவை பணம், நகைகளைத் திருப்பித் தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்து வந்து அனிதாவை அடித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் அனிதாவின் உடலை எரிப்பதா அல்லது புதைப்பதா அல்லது ஆற்றில் தூக்கிவீசுவதா என அவர்களுக்குள் ஆலோசித்தபடியே ஒருநாள் முழுவதும் அனிதாவின் உடலைக் காரின் பின்புற டிக்கியில் வைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றியுள்ளனர்.
ஒருகட்டத்தில் சத்யாவோ தனது பிறந்த ஊரான சோழபுரத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு பின்புறத்தில் புதர்மண்டி கிடக்கும் இடத்தில் குழி தோண்டி புதைத்துவிடலாம் என கூறியிருக்கிறார். அவரது ஆலோசனைபடியே அன்று நள்ளிரவு கார்த்தியும் அவரது தந்தை ரங்கநாதனும், மைத்துனர் சரவணனும் அனிதாவின் உடலை சுருட்டிக்கட்டி, பிளாஸ்டிக் சாக்கு பைக்குள் திணித்து குழி தோண்டி புதைத்துள்ளனர். அனிதாவை இரண்டு மூன்று நாட்களாக காணவில்லை என உறவினர்கள் தேடும்போது ஒன்றும் தெரியாதவர்களைப் போல அனிதாவின் உறவினர்களோடு சேர்ந்துகொண்டு தேடுவது போல் நடித்துள்ளனர். இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் அனிதாவின் உறவினர்கள் புகார் அளித்தனர். ஒருகட்டத்தில் கார்த்தி, சத்யா மீது சந்தேகித்த போலீசார், அவர்களைத் துருவி விசாரித்ததில் வசமாகச் சிக்கிவிட்டனர்.
இதையடுத்து திருப்பனந்தாள் போலீசார் அனிதாவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலை செய்து புதைக்கப்பட்ட அனிதாவின் உடலை போலீசார் தோண்டி எடுப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.
இதுதொடர்பாக திருப்பனந்தாள் போலீசார் வழக்குப் பதிவுசெய்து கார்த்தி மற்றும் அவரது மனைவி சத்யா, ரங்கநாதன், மைத்துனர் சரவணன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.