கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர் 49 வயது ராஜா. இவருக்கு கடந்த ஐந்தாம் தேதி கரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 13 நாட்களாக சிகிச்சையில் இருந்துவந்த ராஜா நேற்று (21.05.2021) திடீரென உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி கயல்விழியும் அவரது உறவினர்களும் ராஜாவுக்கு சுவாசிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டரை எடுத்து வேறு ஒருவருக்குப் பொருத்திவிட்டனர் அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ராஜா உயிரழந்ததாக குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அவரது மனைவி கயல்விழி கதறி அழுதபடியே பேசும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோ காட்சியில் பேசிய கயல்விழி, “எனது கணவர் சிகிச்சையில் இருந்தபோது திடீரென ஒரு டாக்டர் வந்து எனது கணவர் முகத்தில் பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டரைக் கழற்றினார், நான் அந்த டாக்டரிடம் அவர் சுவாசிப்பதற்கு சிரமப்படுகிறார், அதைக் கழட்டாதீர்கள் என்று பலமுறை சொல்லி மன்றாடினேன். அவர் கேட்காமல் அந்த வெண்டிலேட்டரை எடுத்துச்சென்றுவிட்டனர்.
இதனால் என் கணவர் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறினார். நான் அவரது நெஞ்சில் கைவைத்து பார்த்தபோது சிறிதளவு மட்டுமே மூச்சு வந்தது. உடனே நான் மருத்துவரிடம் ஓடிச் சென்று அவரை வந்து கவனிக்குமாறு கதறி அழுதபடியே கூறினேன். ஆனால் யாரும் அவரை வந்து பார்க்கவில்லை அலட்சியமாக இருந்தனர். அதனால்தான் என் கணவர் இறந்துபோனார். நான் என் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு என் குழந்தைகளுடன் ஆதரவற்று நிற்கிறேன்” என்று கதறி அழுதபடியே கூறுகிறார். இவர்களுக்கு சிவசூரியன் என்ற மகனும் சுதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் ராஜாவின் இறப்பிற்கு நியாயம் கேட்டு அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ராஜாவின் உடலைப் ப்ளாஸ்டிக் பையில் வைத்து சுற்றப்பட்டு அடக்கம் செய்வதற்கு மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் அவரது மனைவியும் உறவினர்களும் ராஜாவின் உடலை நேரடியாக சுடுகாட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது, எங்கள் வீட்டுக்குத்தான் கொண்டு செல்ல வேண்டுமென்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ராஜாவின் மனைவி, அவரது உறவினர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரது உடலை மருத்துவமனையிலேயே பாதுகாத்து வைத்துள்ளனர். ராஜாவின் முகத்தில் பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டரை டாக்டர் ஒருவர் அகற்றியதால்தான் ராஜா உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டு குறித்து கடலூர் அரசு மருத்துவமனை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில் “கடந்த 15 நாட்களாக கரோனா சிகிச்சை வார்டில் ராஜா சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 13 நாட்களாக அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவ்வப்போது அவர் உணவு உண்பதற்கு அந்த வெண்டிலேட்டர் இயந்திரத்தை அகற்றிவிட்டு உணவு சாப்பிடுவார். அதன்படி நேற்று அவர் உணவு சாப்பிடுவதற்காக வெண்டிலேட்டரை வெளியே எடுத்து வைத்துவிட்டு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற டாக்டர் ஒருவர் அந்த வெண்டிலேட்டரை மாற்றிவிட்டு புதிய வெண்டிலேட்டரை அவருக்குப் பொருத்துவதற்காக அவரது மனைவியிடம் சொல்லிவிட்டுத்தான் எடுத்துச் சென்றார்.
இந்த நிலையில் ராஜா உயிரிழந்துள்ளார். அவர் இறப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியம் காரணம் இல்லை, ராஜாவின் மனைவி கூறுவது போன்று அவருக்குப் பொருத்தப்பட்ட வெண்டிலேட்டரை எடுத்து வேறு நோயாளிக்குப் பொருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. மருத்துவமனையில் நிறைய வெண்டிலேட்டர் இயந்திரங்கள் இருப்பில் உள்ளன. அப்படியிருக்கும்போது மற்றொருவருக்கு அதை எடுத்துமாற்ற வேண்டிய அவசியமில்லை” என்று மருத்துவமனை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ராஜாவின் மனைவியின் குற்றச்சாட்டுக்கு மருத்துவமனை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளபோதிலும், இருதரப்பிலும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அதற்கான விளக்கம் குறித்து உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்கிறார்கள் கடலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.
மேற்படி திட்டக்குடி ராஜா என்பவர் கரோனா சிகிச்சையில் கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்தபோது கடலூர் டாக்டர் ஒருவர் அவரது ஆக்சிஜன் குழாயை எடுத்ததால்தான் இறந்தாரா என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் உரிய விசாரணை நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இந்த தகவல் கிடைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிகாரிகளைக் கொண்டு முறையான விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் திட்டக்குடி எம்.எல்.ஏவுமான கணேசன் அவர்கள் நேற்று திட்டக்குடி சென்று, இறந்துபோன ராஜாவின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி கயல்விழி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் உரிய விசாரணை செய்யுமாறு மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் குடும்பத்தினரிடம் கூறி ஆறுதல்படுத்தினார்.