Skip to main content

சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையைக் கொன்ற கொடூர மகள்!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

Woman arrested in her father death case

 

தென்காசி மாவட்டத்தின் இலஞ்சியைச் சேர்ந்தவர் கோட்டைமாடன் (82). கடந்த 4ம் தேதியன்று இவர், தனக்குச் சொந்தமான தோப்பில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். இது குறித்து அவரது 2வது மகள் சந்திரா அளித்த புகாரின் அடிப்படையில், குற்றாலம் போலீசார் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 


முதற்கட்ட விசாரணையின் போது கொலையுண்ட கோட்டைமாடனின் 3வது மகளான ஸ்ரீதேவி, மூத்த மகளின் கணவரான பரமசிவன் (57), கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வசந்தகுமார், இலஞ்சியைச் சேர்ந்த மகேஷ் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாவது; கொலையான கோட்டைமாடனுக்கு 3 மகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் மைதீன் பாத் கணவர் பரமசிவன், இரண்டாவது மகள் சந்திரா, மூன்றாவது மகள் ஸ்ரீதேவி, ஆனால் கோட்டைமாடன் தனது 2வது மகள் சந்திராவுடன் வசித்து வந்திருக்கிறார். மேலும் அவருக்குச் சொந்தமாக 1.82 ஏக்கரில் தோப்பும் உள்ளது. அதில் மூன்றில் இரண்டு பகுதியை தனது 2வது மகள் சந்திராவின் மகன் விஜயகுமார் பெயரில் எழுதிவைத்திருக்கிறார். இதற்கு மகள் ஸ்ரீதேவி மற்றும் மூத்த மகளின் கணவர் பரமசிவன் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து வழக்கறிஞர் மூலம் நோட்டீசும் இவர்கள் அனுப்பியுள்ளனர். மேலும் பரமசிவன் வீட்டில் வேலை செய்து வரும் லோடு ஆட்டோ டிரைவர் சேகர் மூலம் பேசியதில் கூலிப்படையை வைத்து கோட்டைமாடனை கொலை செய்து விடலாம் என்று ஸ்ரீதேவியும், பரமசிவனும் திட்டமிட்டுள்ளனர்.

 

Woman arrested in her father death case

 

இதன் பின் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வசந்தகுமார், மற்றும் மகேஷ் இருவரிடமும் ஒரு லட்ச ரூபாய் பேசி அட்வான்ஸாக பதினைந்தாயிரம் கொடுத்துள்ளனர். அதன் பிறகு கூலிப்படையாகச் செயல்பட்ட வசந்தகுமார், மகேஷ் இருவரும் கோட்டைமாடனை கொலை செய்ய இரண்டு முறை முயன்றும் முடியாமல் போகவே கோட்டைமாடனிடம் தோப்பில் உள்ள மரத்தை விலை பேசி வாங்குவது போன்று செட்டப் செய்து வசந்தகுமார் மகேஷ், சேகர் மூவரும் அவரை தோப்பிற்கு வரவழைத்தனர். மரத்தை வெட்டுவது போல போக்குக் காட்டியவர்கள், கோட்டைமாடன் எதிர்பாரத நேரத்தில் திடீரென அவரைக் கம்பால் அடித்துக் கொலை செய்தனர். கம்பால் கழுத்தில் அடித்ததால் வாயிலிருந்து ரத்தம் வருவதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தடயமின்றி இயற்கையாக இறந்தது போன்று காண்பிப்பதற்காகவே கம்பால் தாக்கியுள்ளனர். ஆனால் ரத்தம் வழிந்ததால் கொலை என்பது தெரிந்துவிட்டது. இது குறித்து அந்தப் பகுதியின் சி.சி.டி.வி. மற்றும் செல் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் 5 பேரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவரவே மூன்றாவது மகள், மூத்த மருமகன், கூலிப்படையாகச் செயல்பட்டு மீதிக் கூலிப்பணத்தைப் பெறவந்த இருவர் உட்பட 4 பேர் கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். ஒருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்