தமிழகம் முழுவதும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் அனுமதி இல்லாத அரசு மதுபானக்கடைகள், பார்கள் மூடப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் பல இடங்களில் அரசு மதுபானக்கடையில் பார்கள் அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது அதுவும் 24 மணி நேர சேவை என்ற கணக்கில் விற்பனை அமோகமாக உள்ளது.
கோவை பொள்ளாச்சி மெயின் ரோட்டில் மலுமிச்சம்பட்டி அடுத்து ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் பல்லடம் செல்லும் பைபாஸ் சாலையில் அரசு மதுபானக்கடை (கடை எண் 1765) இயங்கி வருகிறது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு மதுபானக்கடை கடந்த 2 மாதத்திற்கு முன்பாகவே எடுத்துவிட்டனர்.
ஆனால் அங்குள்ள பார் இன்னும் எடுக்கப்படாமல் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. விற்பனையும் அமோகமாக உள்ளது இந்த பார் மூடக்கோரி செட்டிபாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பைபாஸ் ரோட்டில் உள்ள அரசு மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் மூடும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அதையும் மீறி சட்டத்தை மதிக்காமல் கடை எண் 1765 அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடை மூடப்பட்டது. ஆனால் அங்குள்ள பார் மட்டும் இன்னும் மூடாமல் செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அப்பகுதியில் உள்ள சில அரசியல்வாதிகளின் ஆதரவால் 24 மணி நேரமும் பாரில் அமோக விற்பனை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பலமுறை நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்கள். இந்த பாரின் அருகிலேயே 2 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளது. அப்பள்ளிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்கள் இந்த வழியாகத்தான் பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published on 19/06/2018 | Edited on 19/06/2018