மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் புதிய சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டம் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் தோறும் 340 ரூபாய் கட்டணம் இன்று (10.07.2024) முதல் அமலாவதை எதிர்த்து இந்த போராட்டத்தை அதிமுக நடத்தியது. அதிமுகவினர் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாகச் சென்றன. கப்பலூர் பகுதியில் இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்டர் முன் அமர்ந்து பழைய முறையே தொடரும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என கல்லுப்பட்டி பேரையூர் வாகன ஓட்டிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும் கிராம மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார். அதே சமயம் போராட்டக்காரர்களைக் கலைக்க 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சுங்கச்சாவடியில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை உள்ளூர் மக்களுக்கு டோல்கேட் கட்டண விலக்கு அளிக்கப்படும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து சுமார் 10 மணி நேரமாக நடைபெற்று வந்த கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை (15.07.2024) பேச்சுவார்த்தை நடத்துவதாக போலீசார் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெறுவதாகப் போராட்டக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் வாபஸ் பெற்றுக் கலைந்து சென்றனர்.