Skip to main content

காவி பூசுவதால் வள்ளுவர் மதம் மாறிவிடுவாரா? - கவிஞர் வைரமுத்து பேட்டி

Published on 16/01/2023 | Edited on 16/01/2023

 

nn

 

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மாட்டுப்பொங்கல் வாழ்த்தோடு சேர்த்து திருவள்ளுவர் தின வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருவள்ளுவர் தினத்தை ஒட்டி வாழ்த்துகளைச் சொல்லியுள்ளார். அதில் காவி நிற உடையில் வள்ளுவர் நெற்றியில் விபூதிப் பட்டை அணிந்த நிலையில் உள்ள  புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

nn

 

அண்ணாமலையின் இச்செயல் குறித்து செய்தியாளர்கள் திமுக எம்.பி. கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அவர், “திருக்குறளை படித்தால் புரிந்துகொள்வார்கள். அதற்கும் காவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று. முதலில் படிக்கணும். இல்லையென்றால் கலைஞரின் உரை தெளிவாக இருக்கிறது. அதைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்” எனக் கூறியிருந்தார்.

 

அதேபோல் இன்று திருவள்ளூர் சிலைக்கு மரியாதை செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து பேசுகையில், ''தமிழர் திருநாளுக்கும் திருவள்ளுவர் திருநாளுக்கும் இணைத்து விழா காணும் தமிழ் சமுதாயத்தை நான் வணங்குகிறேன். தமிழர் திருநாளாகிய பொங்கலுக்கும் திருவள்ளுவருக்கும் ஓர் அழகான ஒற்றுமை உண்டு. இரண்டு பேரும் மத நம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். மதம் சார்ந்த பண்டிகை அல்ல பொங்கல். உழைப்பு சார்ந்தது, இயற்கை சார்ந்தது, சூரியனையும், மண்ணையும், மாட்டையும், உழைப்பையும் மையப்படுத்துகிற திருநாள் பொங்கல் திருநாள். திருவள்ளுவரும் அப்படித்தான் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்லர்.

 

 Will Thiruvalluvar change his religion by applying saffron? - Interview with poet Vairamuthu

 

திருவள்ளுவர் உலகத்தை சிந்தித்தார், உலக மனிதனை சிந்தித்தார். திருவள்ளுவரைப் பற்றி மகாகவி பாரதியார் சொன்ன ஒரு வார்த்தை போதும் அவரது உச்சம் என்ன என்று உலகம் அறிவதற்கு. 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று அவர் சொன்னதின் ஆழப் பொருளை இந்த சமூகம் அறிந்துகொள்ள வேண்டும். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்தோம் தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்ல உலகத்தில் வாழுகிற எல்லா நாடுகளிலும் உள்ள மனிதர்களுக்கு ஞான பொதுச் சொத்தாக வள்ளுவரை வழங்குகிறோம் என்றால் எந்த மதம் சார்ந்ததாகவும், எந்த தனி நெறியை சார்ந்ததாகவும் இருக்க முடியாது.

 

இந்த நேரத்தில் அரசியல் குறும்பு செய்கின்ற சில நண்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோளை விடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நீங்கள் நிறம் மாற்றுகிறீர்கள், காவி சாயம் பூசுகிறீர்கள். நிறம் மாற்றுவதால், காவி சாயம் பூசுவதால் திருவள்ளுவர் மதம் மாறிவிடுவாரா? நெறி மாறி விடுவாரா? கொள்கை மாறி விடுவாரா? தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு அன்னத்திற்கு கருப்பு சாயம் அடித்தால் அது காகம் ஆகிவிடுமா? அதன் குரல் மாறிவிடுமா? தற்காலிகமாக மாற்றலாம் அன்னத்தின் தன்மை எப்போதும் மாறாது. திருவள்ளுவருக்கு சாயம் பூசினாலும் திருவள்ளுவரின் கருத்து, திருவள்ளுவரின் நெறி என்றும் மாறாது என்பது எங்கள் எண்ணம். திருவள்ளுவருக்கு நிறமாற்றுவதை அரசியல் குறும்பு என மக்கள் கருதுகிறார்களே தவிர, அதை மிக ஆழமாக மிக ஒரு பெரிய கருத்தியல் ரீதியான காரணமாக ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளவில்லை''என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்