"தொடக்கப் பள்ளியான ஒன்றாம் வகுப்பு முதல் நடுநிலை பள்ளியான எட்டாம் வகுப்புகள் வரையிலான பள்ளிகளைத் திறக்க இதுவரை ஆய்வு எதுவும் நடக்கவில்லை" என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிறுவலூர், அயலூர் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சிப் பகுதிகளில், சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் குடிநீர் மற்றும் சாலை திட்டப் பணிகளுக்கு, இன்று 11ஆம் தேதி பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இணைக்கப்படாத ஏரி குளங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 2017-18ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படமாட்டாது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ‘டேப்’ வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகள் வரையிலான பள்ளிகளைத் திறக்க இதுவரை ஆய்வு எதுவும் நடக்கவில்லை. நமது முதலமைச்சரிடம் கலந்துபேசி அதுபற்றி முடிவெடுக்கப்படும். தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்து அரசிடம் இருந்து கடிதம் கிடைத்த பிறகுதான் முடிவு செய்யப்படும். தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கேற்ப 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். சிறப்பு ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ரூ.5,500 மட்டுமே வழங்குகிறது. நமது முதலமைச்சர் அறிவித்தபடி, தற்போது ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. மற்ற ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் குறித்து அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” என்றார். மேலும், அக்கிராம மக்கள் செங்கோட்டையனுடன் சேர்ந்து ஃபோட்டோ மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.