நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நாளை (27/10/2024) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய போது அதற்கான விளக்கத்தை மாநாட்டில் சொல்வதாக தெரிவித்திருந்தார் விஜய். இதனால் மாநாட்டிற்கு தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் கட்சிக் கொள்கையை மாநாட்டில் விஜய் அறிவிக்கவிருப்பதால் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதோடு மாநாட்டுத் திடலில் அரசியல் தலைவர்கள் காமராஜர், பெரியார், அம்பேத்கர் மற்றும் விஜய்யின் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூநாச்சியார், அஞ்சலையம்மாள், மருது சகோதரர்கள் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் கட்டவுட்டுகளும், மாமன்னர்கள், சேர சோழ, பாண்டியர் ஆகியோர்களின் கட்டவுட்டுகளும் இடம்பெற்றுள்ளது.
இதனிடையே த.வெ.க. மாநாட்டிற்கு வருவதற்குத் தமிழக முழுவதும் உள்ள தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கவுள்ள நிலையில் அங்கு வைக்கப்படவுள்ள 600 அடி கொடி கம்பத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றுகிறார். அதன்பின் 6 மணிக்கு மேல் தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசவுள்ளார். அதில் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளையும் அறிவிக்கவுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக கட்சியின் சார்பில் நாளை விக்கிரவாண்டியில் நடைபெறும் மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்ற சூழ்நிலையில், அங்கு வானிலை நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக கடலில் இருந்து நிலப்பகுதிக்கு காற்று வரும் போது ஈரப்பதம் மிகுந்த காற்றாக இருப்பதால் மழை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நாளை மாநாடு நடைபெறும் வி.சாலை பகுதியில் மேற்கு திசையில் இருந்து வரண்ட காற்று தான் வருகிறது. அதனால், அங்கு மழை பெருமளவு வருவதற்கான வாய்ப்பு கிடையாது என்று கூறப்படுகிறது. மேலும், நாளை பிற்பகலில் இருந்து 33 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்ப நிலை இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வெப்ப நிலை சற்றே அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.