சத்தியமங்கலத்திற்கு அருகே காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து 100- க்கும் மேற்பட்ட வாழை மரங்களைச் சேதப்படுத்தியதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் காட்டு யானைகள், உணவுக்காக அருகில் இருக்கும் ஊர்களுக்குள் புகுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய மூன்று காட்டு யானைகள், கீழ்பவானி வாய்க்காலைக் கடந்து தொண்டம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தன.
மாணிக்கம் என்பவரது விளை நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி மற்றும் இரும்பு கேட்டைச் சேதப்படுத்திய காட்டு யானைகள், விவசாயி பன்னீர்செல்வம் என்பவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 100- க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்தனர். இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள் பட்டாசுகளை வெடித்தும், அதிக ஒலியை எழுப்பியும், யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறுவதைத் தடுக்க, ஏற்கனவே வெட்டப்பட்டிருந்த அகழியை, மேலும் ஆழப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.