கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்திலுள்ள சண்முக விலாஸ் ஸ்வீட் கடை கடந்த 70 ஆண்டுகளுக்கு முன் தெருவில் வடை சுட்டு விற்பனையை தொடங்கியது. இது தற்போது பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக கடையின் நிறுவனரின் நினைவு நாளையொட்டி கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக வடையை வழங்கி வடை தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. வடையை பெற்ற பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் வடையை சாப்பிட்டு வாழ்த்தி சென்றனர். இந்த சம்பவம் அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ளது.
சிதம்பரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஆர். ஸ்ரீநிவாசஐயர் இவர் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் தண்ணீர் ஊற்றும் வேலை செய்துள்ளார். சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்த முடியாத சூழலில் வேலையை விடுவித்தார். பின்னர் தெற்குவீதி நரமுக விநாயகர்கோயில் அருகே தள்ளுவண்டியில் வடை சுற்று விற்பனை செய்து வந்துள்ளார். இவரது வடை, மற்ற கடைகளை விட தரமாகவும், குறைந்த விலையில் இருந்ததால் இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் வடையின் வியாபாரம் சூடுபிடிக்க 1948 பிப்ரவரி 10ஆம் தேதி அதே இடத்தில் சண்முகவிலாஸ் வடை கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். பின்னர் காலசூழலுக்கு ஏற்ப அனைத்து இனிப்பு, காரம், பேக்கரி வகைகள் கிடைக்ககூடிய கடையாக மாற்றம் பெற்றுள்ளது.
பொருள்களின் தரத்தை கண்டு பொதுமக்கள் கடையை தேடிவருவதால் சிதம்பரதின் 70 ஆண்டுகளை கடந்த பாரம்பரியமிக்க கடையாக உள்ளது. இந்தநிலையில் கடையை நிறுவியவர் கடந்த 2018 டிசம்பர் 1-ந்தேதி காலமானார். இதனிடையே அவரது மகன் எஸ். கணேஷ் மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி என்எல்சியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர். அப்பாவின் உழைப்பால் உருவான கடையை ஏற்று நடத்த வேண்டும் என்று லட்சக்கணக்கில் வாங்கிய சம்பளத்தை உதறிவிட்டு கடையை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் கடையின் நிறுவனரின் நினைவு தினத்தையொட்டி வடையால் வளர்ந்த கடையில் டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமையென்று கடைக்கு வரும் அனைவருக்கும் ஒரு நாள் முழுவதும் வடை இலவசமாக கொடுப்பது என்றும் ஒருவர் எவ்வளவு வடை வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம் என்றும் அந்த தினத்தை கடையின் வடை தினமாக அனுசரித்து வழங்கப்பட்டது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் கணேஷ் கூறுகையில், "இந்த கடை வடையால் உருவாகி இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. கடையின் நிறுவனரான எங்க அப்பாவின் நினைவு நாளையொட்டி சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை கடைக்கு வந்த அனைவருக்கும் 12000 வடைகள் வழங்கியுள்ளோம். மற்ற நேரங்களில் ஒரு வடை ரூ7-க்கு கடையில் விற்கபடுகிறது. இந்த கடை சிதம்பரம் பகுதி குடிமக்களின் ஆதரவால் வளர்ந்து வருகிறது. நிறுவனர் நினைவு நாளில் இலவசமாக வடை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் இதனை நல்லமுறையில் செய்ய வேண்டும் என்று தற்போது வெங்காய விலை வின்னைமுட்டும் நேரத்தில் 500 கிலோ வெங்காயத்தை கிலோ ரூ180-க்கு வாங்கி காசு முக்கியமல்ல என கருதி தரமாக செய்யப்பட்டது. அதேபோல் கடையின் ஊழியர்கள் அனைவருக்கும் பத்து நாள் சம்பளத்தை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் சனியன்று நிறுவனர் நினைவு நாளையொட்டி கடையில் வடை தினமாக அனுசரிக்கப்பட்டு இதேபோல் வழங்கபடும். கடைக்கு வடை சாப்பிட வந்தவர்கள் பலர் என்னிடம் வந்து இந்த சம்பவம் நெகிழ்ச்சியாக உள்ளது என சால்வை அனிவித்து பாராட்டி வாழ்த்தியது மன மகிழ்வை அளிக்கிறது" என்றார்.