ஈரோடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் மைசூரிலிருந்து வரும் லாரிகளைக் காட்டுயானைகள் உணவுக்காக வழிமறிப்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். குறிப்பாகக் கரும்பு ஏற்றிச்செல்லும் லாரிகளை யானைகள் சூழ்ந்து கரும்புகளைச் சாப்பிடுவது வழக்கமான ஒன்றே. ஆனால், இந்த சம்பவங்கள் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறும். ஆனால் தற்போது பட்டப்பகலிலேயே கரும்பு லாரிகளை யானைகள் சூழ்ந்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தாளவாடி மலைப்பகுதியிலிருந்து கரும்பு லோடு ஏற்றிச்சென்ற லாரியை கார்பள்ளம் சோதனைச்சாவடி அருகே குட்டி யானையுடன் வழிமறித்த காட்டுயானை, லாரி முன்பு சென்று கரும்பு கட்டுகளை உருவி சாப்பிடத்தோடு அதனுடைய குட்டிக்கும் கொடுத்தது. லாரி ஓட்டுநர் லாரியைப் பின்னோக்கி இயக்கியும் யானை விடவில்லை. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.