தருமபுரி மாவட்டம் ஏலகுண்டூர் கிராமத்தில் உணவு தேடிவந்த பெண் யானை ஒன்று, 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த நிலையில், யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தவறி விழுந்த யானை கிணற்றில் சிக்கியுள்ள நிலையில், முதலில் கிரேன் மூலம் யானையை வெளியே கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. அடுத்தபடியாக மயக்க மருந்து செலுத்தி, யானையை வெளியேற்ற வனத்துறை முயற்சி செய்தது. ஆனால், கிணற்றில் ஒரு அடிக்கும் மேலே தண்ணீர் இருக்கும் நிலையில், மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையிலும் தண்ணீரை யானை குடிப்பதால் மயக்கமடைய கால தாமதம் ஏற்பட்டது. தற்பொழுது இரண்டாம் முறையாக யானைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
யானை கிணற்றில் விழுந்த சம்பவத்தால் அங்கு மக்கள் அதிகமாகக் குழுமியுள்ளனர். இரவு நேரம் நெருங்குவதால் மின் விளக்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக உயிருடன் யானையை மீட்டுவிடுவோம் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.