நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து வீட்டை சேதப்படுத்தியதில் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகள் உணவுக்காக ஊருக்குள் புகுந்து குடியிருப்புகளை சேதப்படுத்துவது என்பது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட யானை ஒன்று வீடுகளை இடித்து சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பிட்ட யானையானது இதுவரை 50க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேவாலா பகுதியில் நுழைந்த அந்த யானை பாப்பாத்தி என்பவரின் வீட்டை சேதப்படுத்தியது. அப்பொழுது வீட்டு சுவர் பாப்பாத்தியின் மேல் விழுந்ததில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் யானையை விரட்டி காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பாப்பாத்தியின் உடலை எடுக்க விடாமல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வீடுகளை சேதப்படுத்தி வரும் அந்த யானையைப் பிடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.