
கல்லூரி மாணவ மாணவிகளையும் குடியிருப்பு வாசிகளையும் 5 மணி நேரம் புலி என்ற போர்வையில் காட்டு பூனை ஒன்று பதட்டத்தில் ஆழ்த்தியது.
நாகர்கோவில் மைய பகுதியான செட்டிக்குளத்தில் உள்ளது எஸ்.டி இந்து கல்லூரி. இங்கு 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கல்லூரி வளாகத்தில் கல்வியியல் கல்லூரி ஓன்றும் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கல்லூாரியின் வெளிப்புறத்தை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் வா்த்தக நிறுவனங்களும் செயல்படுகிறது.

இந்தநிலையில் இந்த கல்லூரியின் ஓரு பகுதியில் அடர்ந்த காடு போல் மரம், செடிகளும், தென்னை மரங்களும் உள்ளன. அந்த பகுதி பார்ப்பதற்கு குட்டி வனம் போல் காட்சியளிக்கும். இந்த நிலையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் வழக்கம் போல் கல்லூாரி செயல்பட்டு கொண்டிருந்தது.
அப்போது அந்த அடர்ந்த பகுதியில் வேலைகாரர்கள் புல் வெட்டி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென்று அங்கு பதுங்கியிருந்த புலி ஒன்று குதித்து வளாகத்தில் இருக்கும் ஹாஸ்டலை நோக்கி ஒடியதாக வேலை செய்து கொண்டிருந்தவா்கள் அலறி அடித்து கொண்டு ஓடி கல்லூாரி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.

உடனே மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதைதொடர்ந்து கல்லூரிக்கும் விடுமுறை விடப்பட்டது. மாணவ மாணவிகளும் கல்லூாரியில் இருந்து பீதியுடன் வெளியேறினார்கள். இந்த சம்பவம் காட்டு தீ போல் அந்த பகுதிகளில் பரவியது.
உடனே வனத்துறையினர் கல்லூரிக்குள் வந்து புலிகள் சென்றதாக கூறிய கால் தடயங்களை ஆய்வு செய்து கல்லூரி வளாகம் முமுவதும் புலியை தேடினார்கள். சுமார் 5 மணி நேரம் தேடுதலுக்கு பின் அது புலியின் கால் தடயம் அல்ல காட்டு பூனையின் கால் தடயம் என வனத்துறையினா் உறுதி செய்தனர். இதனை தொடா்ந்து அந்த பகுதி வாசிகள் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.