ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர். அப்போது கலெக்டர் நுழைவாயில் அருகே வந்த ஒரு நபர் திடீரென மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீசார் உடனடியாக ஓடிவந்து அந்த நபரிடம் இருந்து பாட்டிலை பறித்து மேலே தண்ணீரை ஊற்றினார். அப்போது அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது யூசப் (49) என்பதும் கார் டீலராக இருப்பதும் தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு முகமது யூசப்பிடமிருந்து ரூ.13 லட்சத்தை அவரது மனைவியும், மாமியாரும் வாங்கிக் கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை முகமது யூசுப் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தபோது தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை சூரம்பட்டி போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.