விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரளா (பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது). 34 வயதான இவர் செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வந்தார். சரளாவிற்கு பொன்னன் என்பவருடன் திருமணமாகி 16, 14, 10 வயதுகளில் மூன்று பெண்குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகள் முன்பு பொன்னன் இறந்துவிட்ட நிலையில், திருச்சி, முசிறி பகுதிகளில் பல்வேறு செங்கல் சூளைகளில் வேலை பார்த்து வந்தார்.
செங்கல் சூளையில் சரளாவிற்கு பிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சரளாவின் மகள்களிடம் பிரபு அத்துமீறி நடந்துள்ளார். இதனை நேரில் பார்த்த சரளா பிரபுவினை கண்டித்துள்ளார். இதனைக் கேட்காததால் பிரபுவை அரிவாளால் வெட்டி கட்டையால் அடித்து தான் வசித்து வந்த வீட்டின் பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் தள்ளிவிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி உடல் முழுதும் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. காவலர்கள் இது குறித்து விசாரித்ததில் முழு விவரமும் அறியப்படாத நிலையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தனது மகனைக் காணவில்லை எனக் கூறி பிரபுவின் தந்தை நேற்று முசிறி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் சரளாவை காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில், தான் பிரபுவை கொலை செய்ததை சரளா ஒப்புக்கொண்டார். மேலும் காவல்துறையினர் விசாரணையில், தான் எவ்வாறு கொலை செய்தேன் என்றும் செய்து காட்டியுள்ளார். இதையடுத்து சரளா பிரபுவை கொலை செய்ய பயன்படுத்திய அரிவாள் போன்ற பொருட்களை கைப்பற்றிய காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.