நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் தேவை, மற்றும் இன்னல்கள் தீர சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று சங்ரன்கோவில் மாவட்டம் கோரிக்கை இயக்க ஒருங்கிணைப்புக் குழுவினர் அரசுக்குக் கோரிக்கை மனு அளித்தும், 17ம் தேதியன்று தொகுதி முழுவதிலும், கடையடைப்பு, தொழில் நிறுத்தம் செய்து அரசின் கவனத்தைத் திருப்பும் வகையில் பந்த் அறிவித்தனர்.
அன்றைய தினம் பெட்டிக்கடை முதல் பெரிய கடை வரை அடைக்கப்பட்டதுடன், டீ சாப்பிடுவதற்குக் கூட முடியாத அளவுக்கு அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. இது மட்டுமல்ல, சுமார் ஐந்தாயிரம், விசைத்தறிகளைக் கொண்ட தொகுதியின் அனைத்து தொழில் நிறுவனங்களும் நிறுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. நகரம் மட்டுமல்லாது திருவேங்கடம் தாலுகா முதல் குக்கிராமங்கள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சங்கரன்கோவில் தொகுதியே ஸ்தம்பிக்கும் நிலைமைக்கு சென்றது.
ஒருங்கிணைப்புக்குழு சார்பில், பொது மற்றும் நிர்வாகக் குழு தலைவர் முத்தையா, செயலாளர் உள்ளிட்டோர்களும் நகர வர்த்தக அமைப்பு, விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், தரப்புகளின் முக்கியஸ்தர்கள், தி.மு.கவின் முன்னாள் எம்.பி. தங்கவேலு மற்றும் நகரின் பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்களுடன் ஆயிரக்கணக்கில் திரண்டவர்கள் பேரணியாக வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். விவசாயம், ஆன்மீகம், வர்ததகம், தொழில் உற்பத்தி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் உள்ளிடக்கிய சங்கரன்கோவில், மாவட்டத் தலைநகரமாவதற்கான சாத்தியக் கூறுகள் அடங்கிய கோரிக்கை மனுவை வட்டாட்சியரிடம் கொடுத்தனர்.
இந்த விவகாரம் ஒரு புறம் வளர்ந்து கொண்டு போனாலும், மறுபக்கமோ, எம்.பி.யான வைகோ, மற்றும் பொது நல ஆர்வலர்களும், சங்கரன்கோவில், நெல்லையுடனேயே நீடிக்க வேண்டும். தென்காசியுடன் இணைப்பு கூடாது என்ற ஒத்த கருத்தினையும் முன் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்தது போராட்டமல்ல. ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.