Skip to main content

இறந்தும் என் கணவர் வாழட்டும்; ஆசிரியர் மனைவியின் நெகிழ்ச்சியான செயல்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

 wife donates her husband's organs after his passed away

 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டிக்கு அருகேயுள்ளது மணியம்பாடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 45 வயதான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு 14 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தனது குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு இருந்து வந்த ஆசிரியர் செந்தில்குமார், கடந்த 28 ஆம் தேதி பள்ளிக்குச் சென்று அன்றைய தின வகுப்புகளை முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்துள்ளார். 

 

செந்தில்குமார் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த உடன் வாக்கிங் செல்வது வழக்கம். அதன்படி அன்று மாலை கடத்தூர் ஒடசல்பட்டி சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த டூவீலர் ஒன்று எதிர்பாராத நேரத்தில் திடீரென செந்தில்குமார் மீது மோதியிருக்கிறது. இதில், பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலமாக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

 

அதன்பிறகு, இந்த விபத்து குறித்த தகவலறிந்து செந்தில்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கு, செந்தில்குமாருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான மனைவி மற்றும் குடும்பத்தார் அங்கேயே கதறி அழுதுள்ளனர். அதன் பிறகு, மருத்துவமனைக்கு வந்திருந்த செந்தில்குமாரின் நண்பர்கள், மூளைச்சாவு அடைந்ததால் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என அவரின் மனைவி விஜயலெட்சுமிக்கு அறிவுரை கூறியுள்ளனர். அதன்படி, செந்தில்குமாரின் உடல் உறுப்புகளை அவரின் மனைவி மற்றும் குடும்பத்தார் தானம் செய்துள்ளனர். இதனையடுத்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் செந்தில்குமாரின் இதயம், கண்கள், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதுகுறித்த செந்தில்குமாரின் மனைவி விஜயலெட்சுமியிடம் கேட்ட போது, தனது கணவர் வாக்கிங் செல்லும்போது எதிர்பாரா விதமாக விபத்துக்குள்ளாகியுள்ளார். அவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அவரைக் காப்பற்ற முடியவில்லை. அவர் மூளைச்சாவு அடைந்திருக்கிறார் என டாக்டர்கள் முடிவாகக் கூறியதும், அவர்தான் வாழவில்லை அவரின் உறுப்புகளாவது உயிரோடிருக்கட்டும் என்பதற்காக அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாகக் கூறியுள்ளார். மேலும், தமது குடும்பம் கணவர் செந்தில்குமாரின் வருமானத்தில் மட்டுமே இயங்கி வந்ததாகவும், தற்போது அவர் இல்லாததால் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது எனவும் கூறியிருக்கிறார். அதனால், அரசு கருணை அடிப்படையில் ஏதேனும் ஒரு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்