ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் கனமழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் உள்ள இடங்களில் மழை நீர் தேங்கி வருவதால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வ உ சி காய்கறி சந்தையில் வழக்கம் போல் சேரும் சகதியமாக காட்சியளித்து வருகிறது. ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ள சாவடிபாளையம் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது.
இந்த ரெயில்வே நுழைவு பாலம் வழியாக காட்டுப்பாளையம், சாலப்பாளையம், தூரபாளையம், சாமிநாதபுரம், செல்லப்பம்பாளையம், மஞ்சக்காட்டு வலசு உள்ளிட்ட 7- கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக ரெயில்வே நுழைவு பாலம் அருகே செல்லும் கசிவு நீர் கால்வாயில் மழை நீர் அதிக அளவில் சென்றதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மாற்று பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் ரெயில்வே நுழைவு பாலத்தின் இரு புறங்களிலும் வாகன ஓட்டிகள் செல்லக் கூடாது என அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.மழை காலத்தில் இது போன்ற பிரச்சினை ஏற்படுவதால் இந்த பிரச்சனைக்கு ரெயில்வே நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நிரந்தர தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைப்போல் மொடக்குறிச்சி, கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. இதேபோல் விவசாய நிலங்களுக்குள் மழை நீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். .