சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, விழுப்புரம், திருவண்ணாமலை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம் என 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் சென்னையைப் பொறுத்தவரையில் 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதன் காரணமாகச் சென்னையின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையின் ஆலந்தூர், வடபழனி, கொளத்தூர், கிண்டி, அசோக் நகர், நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், செம்பாக்கம், சேலையூர், மாடம்பாக்கம், வேங்கைவாசல், சிட்லபாக்கம், மேடவாக்கம், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.