தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணப்பலன்களைப் பல ஆண்டுகளாக அரசு நிறுத்தி வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் கோட்ட அலுவலகம் எதிரே ஓய்வூதியம் பெற்று வந்த 500-க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2016 முதல் கடந்த 7, 8 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பஞ்சப்படி உயர்வானது நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு உண்ணாவிரதம், முற்றுகை போன்ற போராட்டங்களில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவர்களது பிரச்சனை 100 நாட்களில் தீர்க்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், ஆட்சிக்கு வந்து 500 நாட்களுக்கு மேலாகியும் தங்களது பிரச்சனையில் அரசு கவனம் செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து இந்த சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.