
பறை இசைக்கலைஞர்கள் இறந்து போனால் புதைப்பதில் ஏற்படும் சமூகச்சிக்கல் குறித்து பறை என்ற மியூசிக் வீடியோ ஆல்பம் யூடியூப்பில் வெளியாகியது.
இந்த வெளியீட்டு விழாவில் ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் த.சே.ஞானவேல் கலந்துகொண்டு பேசுகையில்,'' இன்றைக்கு வரைக்கும் நாம் சுதந்திரத்திற்குப் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். 1947, ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரம் அடைந்தது என்பது இந்திய அரசியல் சாசன அடிப்படையில் சாத்தியமாக இருக்கலாம். ஆனால் இன்னும் பண்பாட்டு ரீதியாக நாம் அடிமைப்பட்டுத் தான் இருக்கிறோம். நாம் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதற்கு இங்கு சுதந்திரம் கிடையாது. என்ன சாப்பாடு சாப்பிடுகிறோம் என்பதில் சுதந்திரம் கிடையாது.
நினைச்சு பாருங்க எத்தனை விதமான விஷயங்கள் இருக்கிறது யூடியூபில். எத்தனை வகையான குக்கிங் சேனல் இருக்கிறது. ஆனால் அவற்றில் மாட்டுக்கறி மாதிரியான உணவை குறித்த ஒரு வீடியோவை நீங்க பார்க்கவே முடியாது. அது ஒரு உணவு தானே. அதை சாப்பிடுபவர்களும் இங்கு இருக்கிறார்கள் தானே. ஏன் அந்த உணவு குறித்த வீடியோவை போட முடியவில்லை. உணவு, கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றிலும் தீண்டாமையை நம்மை அறியாமல் நாம் கடைபிடித்து வருகிறோம். இதை யாரும் செய்யவில்லை அதை தான் நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்'' என்றார்.