தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில், உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானத்தை தமிழக கட்சிகள் ஆதரிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும், ’’காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் பல முறை உத்திரவிட்டும் ஏற்க மறுத்து தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயல்படும் பிரதமர் மோடிக்கு துணை போகும் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையை வெளிப்படையாக குறிப்பிட மறுத்தும் வருகிறார். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது.
இந்நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் கொடுத்துள்ள தீர்மானத்தை தமிழக கட்சிகள் ஆதரிக்காதது ஏன்?
அ.இ.அ.தி.மு.க உடனடியாக ஆதரித்து கடிதம் அளிக்க வேண்டும்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஏற்க மாட்டேன் என பகிரங்கமாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் அளித்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள மோடி அரசு முன் வர வேண்டும்.
தமிழக அரசு சித்தராமைய்யா கடிதம் குறித்து உச்சநீதி மன்றத்தில் புகார் அளிக்க வேண்டும்’’ என்றார்.