இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு நிலைப்பாட்டில் இருந்த திமுக தற்போது என்.எல்.சிக்கு ஏன் நிலத்தை எடுத்து கொடுக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ''என்எல்சிக்கு நிலம் எடுப்பதற்காக காவல்துறையை வைத்து அப்புறப்படுத்தும் நிலைக்கு மக்களை கொண்டு வந்து விட்டார்கள். திடீரென ஏன் தமிழ்நாடு அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறு நிலைப்பாட்டில் இருந்த திமுக இன்று ஏன் இவ்வளவு தீவிரமாக மக்களை, விவசாயிகளை விரட்டியடித்து விலை நிலங்களை கையகப்படுத்தி என்எல்சி நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும். என்எல்சி என்பது மத்திய அரசின் நிர்வாகம். பொதுவாக திமுகவும் பாஜகவும் நேர் எதிராக இருக்கக்கூடிய கட்சிகள். அப்படியிருக்க மத்திய அரசு நிர்வாகத்திற்காக ஏன் இப்படி நிலத்தை எடுத்துக் கொடுக்கிறது திமுக. என்எல்சி இல்லை என்றால் தமிழ்நாடு இருண்டு விடும் என்று அமைச்சர் சொல்லுகிறார். ஏன் உங்களிடம் மின்சாரம் தயாரிக்க வேறு நிறுவனங்கள் இல்லையா? 2030க்குள் 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை நீரேற்று மூலமாக, சூரிய ஒளி மூலமாக, காற்றாலை மூலமாக அதிகப்படுத்துவோம் என்று ஆட்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு வெறும் 1000 மெகாவாட்டுக்காக ஒட்டுமொத்த மாவட்டத்தை அழிக்க வேண்டுமா?
உலகம் முழுவதும் சூழ்நிலை மாற்றங்களால், காலநிலை மாற்றத்தால் நிலக்கரி சம்பந்தமான அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகிறது. இங்கு ஏன் நீங்கள் திறக்கிறீர்கள். நேற்று கொண்ட கொள்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் எங்களுடைய கேள்வி? இந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் ஆட்சியராக இல்லாமல் என்எல்சி தரகர் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்களுக்குத்தான் நீங்கள் மாவட்ட ஆட்சியர் என்எல்சி நிர்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியர் கிடையாது'' என்றார்.