தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் நிலை காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் தீவிரம் அடைந்துவருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாள்தோறும் அதிக ஆர்வம் காட்டி மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இந்தநிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி இல்லை என ஊழியர்கள் கூறியதால் மக்கள் வாக்குவாதம் நடத்தினர். நாங்கள் நீண்ட தூரத்திலிருந்தது வந்துள்ளோம். ஏன் தடுப்பூசி இல்லை என்பதை முன்னரே கூறவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
தடுப்பூசி முற்றிலுமாக இல்லை என்ற தகவல் அங்கிருந்த மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், தடுப்பூசி போடுவதற்காக காலை 4:00 மணி முதலே காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கோரிப்பாளையம் செல்லக்கூடிய சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.