மயானங்களில் உள்ள சாதிப் பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து கிராமங்களிலும் சாதி பாகுபாடின்றி பொதுவான மயானங்களை அமைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடுவூர் கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் நிரந்தரமாக மயானம் அமைக்க நிலம் ஒதுக்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ''எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைத்து குடிமக்களும் பொது மயானங்களை பயன்படுத்த உரிமையுள்ளது. விதிகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வேண்டும். பொது மயானம் வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளை ஊக்கத்தொகை மூலம் ஊக்குவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.